Saturday, April 28, 2007

338. நேர்மைக்கு விலையாக உயிர் கொடுத்த ராணுவ மேஜர்

ராணுவத்தில் சேர்ந்து பணி புரிய வேண்டும் என்ற தன் கனவை, பட்டப்படிப்பை முடிப்பதற்கு முன்னமே, ராணுவ ஆபிஸர் பயிற்சிக்கான தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்று, நனவாக்கிக் கொண்டவர், சென்னையைச் சேர்ந்த ரவி சங்கர். 1988-இல், சிக்கிம் மாநிலத்தில், ராணுவ லெப்டினண்டாக பொறுப்பேற்றவர், கார்கில் யுத்தத்திலும் பங்காற்றியவர். பின்னர், மேஜராக பதவி உயர்வு பெற்று, 2003-இல் மதுராவில் உள்ள AERN ரெஜிமெண்ட்டுக்கு மாற்றலானார்.
Photo Sharing and Video Hosting at Photobucket
அங்கு போய்ச் சேர்ந்த 2 மாதங்களுக்குப் பின், தன் தந்தையுடன் தொலைபேசிய ரவி, அந்த ரெஜிமெண்டில் நடைபெற்று வரும் தில்லுமுல்லுகள், ஊழல் குறித்து அவரிடம் சொல்லி மிகவும் வருத்தப்பட்டதாகத் தெரிகிறது. 2003, ஆகஸ்ட் 22 அன்று, வெளியில் சென்றவர், வீடு திரும்பவில்லை. ரவியைக் காணவில்லை என்று அன்றிரவே, அவரது மனைவி வீணா, ராணுவ அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, புகார் தந்துள்ளார். புகாரும் பதிவு செய்யப்படவில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை! மேஜர் ரவி, அடுத்த பத்து நாட்களில், லெப்டினண்ட் கர்னலாக பதவி உயர்வு பெறும் தறுவாயில் இருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

23-ஆம் தேதியும் FIR பதிவு செய்யப்படவில்லை. இறுதியாக, ஆகஸ்ட் 24 அன்று, FIR பதிவு செய்ய ராணுவ அலுவலகம் ஒப்புக் கொண்டது! மேஜர் ரவி இறந்து விட்டதாகவும், ரயில்வே தண்டவாளத்தின் அருகிலிருந்து கண்டெடுக்கப்பட்ட அவரது உடல் அடையாளம் தெரியாத நிலையில் 23-ஆம் தேதி மாலையே எரிக்கப்பட்டு விட்டதாகவும், வீணாவுக்குப் பின்னர் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. விஷயத்தைக் கேள்விப்பட்ட ரவியின் வயதான பெற்றோரும் மனமுடைந்து போயினர். "அடையாளம் தெரியாத" என்ற விஷயமே சந்தேகத்திற்குரியது. ரவி எப்போது, தனது ஐ.டி. கார்டையும், பர்ஸையும் எடுத்துச் செல்வது வழக்கம் என்று அவர் தந்தையார் வாசு கூறுகிறார்.

"FIR ஏன் 24-ஆம் தேதி வரை ரெஜிஸ்டர் செய்யப்படவில்லை ? எதற்கு அவசர அவசரமாக உடலை எரிக்க வேண்டும் ? ரவியின் (வாட்ச், பர்ஸ், ஐ.டி.கார்ட்) போன்ற உடைமைகள் என்ன ஆயின? " போன்ற ரவியின் தந்தை கேட்ட சங்கடம் தரும் கேள்விகளுக்கு, ரவியின் மேலதிகாரியிடம் பதில் எதுவும் இல்லை!

"என் மகனுக்கு அங்கு நடக்கும் ஊழல் பற்றிய விவரம் தெரிந்து போனதால், அதை அவன் வெளியில் சொல்வதற்கு முன் அவனை தீர்த்துக் கட்டி விட்டார்கள் என்று நினைக்கிறேன். அவன் உடல் இரு துண்டுகளாக வெட்டப்பட்டு, தண்டவாளத்தில் போடப்பட்டு, யாரும் பார்ப்பதற்கு முன் எரிக்கப்பட்டு விட்டது!" என்று வாசு கூறுகிறார்.

ராணுவத்தின் முதல் விசாரணையில், ரவி ரயிலில் அடிபட்டு இறந்து போய் விட்டதாகக் கூறப்பட்டதை வாசு ஏற்கவில்லை. ராணுவத் தலைவரான ஜெனரல் விஜ் அவர்களுக்கு, வாசு தன் சந்தேகங்களை விளக்கி இரு முறை கடிதம் எழுதியும் ஒன்றும் நடக்காமல், பின் பத்திரிகைகளுக்கு விஷயத்தைச் சொன்னவுடன், விஜ் இரண்டாவது விசாரணைக்கு உத்தரவிட்டார். அது சென்னையில் நடந்தது.

இரண்டாவது "போலி" விசாரணை, ரவி தற்கொலை செய்து கொண்டு இறந்ததாகத் தெரிவித்தது ! அதாவது, முதல் விசாரணையின் விபத்து, தற்கொலை ஆனது!!! "தற்கொலை என்று கூறினால், எங்கள் குடும்பம் வெட்கப்பட்டு வாயை மூடிக் கொள்ளும் என்று ராணுவத்தில் சிலர் எதிர்பார்த்தனர்" என்று வாசு கூறுகிறார்! 2005-இல் வந்த RTI act-இன் பலத்தால், ரவியின் மரணம் குறித்த பல ஆவணங்களை, சிரமப்பட்டு ராணுவத்திடமிருந்து வாசுவால் பெற முடிந்தது. அவற்றை வாசித்த பின், அவருக்கு இன்னும் பல (பதில் இல்லா) கேள்விகள் எழுந்துள்ளன!

"ராணுவம் நடத்திய 2 விசாரணைகளும் நியாயத்துக்கும், உண்மைக்கும் புறம்பானவை. எனவே, என் மகனின் சந்தேகத்துக்குரிய மரணம் குறித்து CBI விசாரணை நடத்த வேண்டும். என் மகனைக் கொன்றவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும், அதற்காக நான் இறக்கும் வரை போராடுவேன், என் மகன் ஏன்/எப்படி இறந்தான் என்பதைக் கண்டுபிடித்தால் தான், எனக்கும் என் மனைவிக்கும் சற்று மன அமைதி ஏற்படும். ஒரு அநாதைப் பிச்சைக்காரனின் உடலை எரிப்பது போல என் மகனை எரித்திருப்பதை நினைத்தால் என் மனது தாங்கவில்லை" என்று கூறும் (கடந்த 4 வருடங்களாக இப்பிரச்சினையின் தீர்வு வேண்டி போராடிக் கொண்டிருக்கும்) 76 வயதான வாசு அவர்களின் மன உறுதியையும், போராட்ட குணத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். CBI விசாரணைக்கு உத்தரவிடும்படி வேண்டுகோள் விடுத்து, வாசு (பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு) எழுதிய கடிதத்திற்கு இது வரை பதில் இல்லை!

இந்த விஷயம் இந்திய ராணுவத்திற்கு ஒரு பெரிய பிளாக் மார்க் என்பதென்னவோ நிஜம்! ரவியின் தந்தையின் இப்போராட்டத்திற்கு ஆதரவு தர விரும்புவோர், கீழே தரப்பட்டுள்ள சுட்டிக்குச் சென்று, உங்கள் ஆதரவை உடனே தெரிவியுங்கள்! ரவியின் மரணம் குறித்த உண்மைகள் வெளிவருவதற்கு நம்மாலான சிறிய பங்களிப்பு இது!

http://www.petitiononline.com/MajRS/petition.html

மேஜர் ரவியின் ஆன்மா சாந்தி அடையவும், அவரது பெற்றோர் மன அமைதி பெறவும் பிரார்த்தனையோடு


என்றென்றும் அன்புடன்
பாலா

*** 338 ***

5 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment !

said...

The criminals involved should be brought before justice and punished severely ....

said...

Good posting, thanks ...

dondu(#11168674346665545885) said...

இந்த விஷயத்தைப் பற்றி அக்காலக் கட்டத்திலெயே ஜூ.வி. ரிப்போர்டர் ஆகியவற்றில் படித்துள்ளேன்.

இப்படியெல்லாம் நடந்தால் அப்புறம் நேர்மையானவர்கள் எப்படி ராணுவத்தில் சேருவார்கள்?

இம்மாதிரி தெருவில் விபத்து நடந்து யாரையாவது மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ மனையில் சேர்த்தால் அவர்களை போலீஸ் படுத்தும் பாட்டை பார்த்தே இப்போதெல்லாம் அப்படியே போட்டுவிட்டு செல்வதுதான் அதிகம் நடக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

enRenRum-anbudan.BALA said...

Thanks, Dondu Sir !

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails